பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வு அல்ல… வாழ நினைத்தால் வாழலாம்..!

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்ந்துதான் பார்க்கணும்! தோல்வியும் வெற்றியும் அவரவர் பார்க்கும் பார்வையில்! வாழ்க்கை வாழ்வதற்கே. நாம் வாழும் வாழ்க்கையில் துக்கங்களையும் இன்பங்களையும் சமமாக பார்க்கும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்க்கையை வாழ்கிறார்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால் சந்தோஷமாக நாம் வாழ வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இன்று நாம் சந்தோஷத்தை நமக்குள் தொலைத்துவிட்டு வெளியே தேடி கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவர்களால் மட்டும் தான் அதை அனுபவிக்க முடியும்.
வாழ்க்கை என்பது நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் அனுபவங்களையும் ஆசைகளையும் கற்றுத்தருகிறது. குழந்தை பருவத்தில் விளையாடுவதற்கான ஆசை, விடலைப் பருவத்தில் வாழ்க்கையை ரசிப்பதற்கான ஆசை, வேலை செய்யும் வயதில் சம்பாதிப்பதில் ஆசை, கல்யாணம் முடிக்கும் வயதில் குடும்பத்தில் ஆசை, வயதான காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க ஆசை. ஒவ்வொரு பருவத்திலும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான ஆசைகளை நாம் புரிந்துகொண்டு அனுபவிக்க வேண்டும். ஆசை சந்தோஷத்தை மட்டும் உள்ளடக்கியது மட்டுமன்றி அது துக்கத்தையும், கஷ்டத்தையும் சேர்த்தே நமக்கு கொடுக்கிறது.
ஏனோ நம் மனம் ஆசையை மட்டும் சந்தோஷமாக பார்க்க பழகிவிட்டது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. அதை கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு நாம் ஒரு சில கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது அதற்கு நிகரான ஒரு விலையை நாம் கொடுக்க வேண்டும். விலை என்பது ரூபாய் மட்டும் கிடையாது. அதற்கு ஈடான பொருள்கள் அல்லது விட்டுக்கொடுத்தல் அதில் அடங்கும்.
இன்று பெரும்பான்மையான மக்களிடம் ஆசை நிறைவேறவில்லை என்றால் ஏமாற்றம் அடைகிறார்கள். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு, மனச்சோர்வு, வாழ்க்கையில் கசப்பு, தற்கொலை செய்யும் எண்ணம் என்று பல போராட்டங்களில் மனம் சஞ்சலப்படுகிறது. “ஏன் தான் எனக்கு மட்டும் இப்படி நடக்கின்றது” என்று பல கேள்விகள் அவர்கள் தம்மைத்தாமே கேட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்காதபட்சத்தில் மனம் தற்கொலையை நாடுகிறது. வாழ்க்கையை முடிப்பதற்கு இருக்கும் துணிவு ஏன் தான் வாழ்வதற்கு அவர்களால் எடுக்க முடியவில்லையோ.
பிரபலங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டால் அது ஒரு செய்தியாகிவிடுகிறது. அதை நாம் அனைவரும் பேசுகிறோம். ஏனோ நமக்குத் தெரிந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள் தற்கொலை முடிவை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அல்லது அந்த முடிவை எடுப்பதற்காக யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதை ஏனோ நாம் கவனிக்க தவறிவிட்டோம். தற்கொலை செய்பவர்களின் மனநிலை அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அவர்கள் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் வலியை அல்லது போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று தான் யோசிக்கிறார்கள். வலியை முடிப்பதற்கு பல வழிகள் இருக்கும் போது ஏன் தான் நம் மனம் வாழ்க்கையே முடிப்பதற்கு யோசிக்கிறது.
பொதுவாக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் பிரச்சினையை மிகவும் பெரியதாகவும், யாரும் நம்மை புரிந்து கொள்ளமாட்டார்கள் என்றும், நமக்கு உதவயாரும் முன்வரமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களிடம் நம் பிரச்சனைகளுக்கு நாம் ஆலோசனை கேட்கும் முன் நாமே ஒரு முடிவு எடுத்துக்கொள்கிறோம். அந்த முடிவு சரியா தவறா என்று நாம் யோசிப்பது இல்லை. மனம் குழப்பத்தில் எடுக்கும் முடிவை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பொதுவாக நாம் பிரச்சனைகளை மூன்று விதமாக பார்க்கிறோம். 1. பிரச்சினையை அது இருக்கும் தன்மையை நம்மளால் அப்படியே உணர முடிகிறது. நம் பிரச்சினையின் தன்மையை புரிந்து கொள்ளும் போது அதற்கான முடிவையும் நம்மால் எடுக்க முடிகிறது. முடிவு எடுக்கும் பட்சத்தில் பிரச்சனையும் முடிகின்றது.
2. பிரச்சனையின் தன்மையை குறைத்து மதிப்பிடல், அதை கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்காமல் விடுதல், பிரச்சினையை எதிர்கொள்வதற்கான தைரியம் இல்லாமை, மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கிவைத்தல், என்று பல காரணங்கள் இருக்கிறது. இப்படி பல விஷயங்களை கவனிக்காமல் ஒதுக்கிவைக்கும் போது அல்லது அதனை மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது சிறிய பிரச்சினைகளும் நாளடைவில் நமக்கு பெரிய பாதிப்பை மனதளவில் உண்டு பண்ணிவிடுகிறது.
3. பிரச்சினையின் தன்மையை மிகைப்படுத்தி பார்த்தல். சிறிய விஷயத்தையும் பெரிதாக நினைப்பது, பிறர் நம்மைப் பற்றி என்ன யோசிப்பார்கள் என்று நினைப்பது, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்று தன்னைப் பற்றியும் தன் கஷ்டத்தை பற்றியும் அளவுக்கு அதிகமாக யோசிப்பார்கள்.
யாருக்கும் நம்மைப் பற்றி யோசிப்பதற்கு நேரமில்லை என்பதை இவர்களால் உணர முடியாது. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுவார்கள்.
எந்தப் பிரச்சினைக்கும் அதற்கு கொடுக்க வேண்டிய கவனம் கொடுத்துவிட்டால் அது நம்மை தொந்தரவு செய்யாது. பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் நாம் செயல்படும்போது அது நம் மனதை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. நம் மனதை நமக்கு கட்டுப்படுத்த தெரியாமல் போகும் போது, நம் பிரச்சனைக்கு முடிவு கிடையாது என்று நாம் நினைக்கும் போது மனம் தற்கொலை எண்ணத்தை நாடுகிறது.
அவ்வாறு மனம் போராடும் போதும், விரக்தியை நாடும் போதும், வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போதும் நாம் உடனே உதவியை நாடவேண்டும். முதலில் நமக்கு நாமே உதவ வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் போது நம் பிரச்சினைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு உண்டு என்பதை நாம் நம் மனத்துக்கு முதலில் உணர்த்த வேண்டும்.
மனதை நாம் புரிந்து கொள்வதற்கும் அதை வழிநடத்திச் செல்வதற்கும் நமக்கு உதவியும் பயிற்சியும் தேவைப்படுகிறது. நமக்கு உதவ நம்மை சுற்றி நம் உறவுகளும், நண்பர்களும், அரசாங்கமும், சமூக ஆர்வலர்களும், தொழில் வல்லுநர்களும் இருக்கிறார்கள். நாம் பிரச்சினையை பகிரும் போது தான் நமக்கு அதற்கு உண்டான உதவிகளும் பதில்களும் கிடைக்கின்றது. பிரச்சினையை நாம் யாரிடம் கூறுகிறோம் என்பதும் மிகவும் முக்கியமான விஷயம். அதற்கான தகுந்த நபர்களிடம் நம் பிரச்சினைகளை பேசும் போது நமக்கு கட்டாயம் உதவி கிடைக்கின்றது. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை முடிவு இல்லை. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா, வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில், காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம் என்ற பாடலின் வரிகள் நமக்கு வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கையே வாழ்வதற்கான அனுபவத்தையும் கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கை ஒரு சுகமான பயணம் அதில் ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையை ரசிப்பதற்கும் வாழ்வதற்கும் காரணமாக அமைகிறது. வாழ்க்கை வாழ்வதற்கே.
—செல்லம் நரேந்திரன், உளவியலாளர், 9843314949

Related posts

Leave a Comment