ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்துக்கு வருகிற 1-ந் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி 50 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது என்றும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத்தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதில் கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், பொது மக்கள் பயன்படுத்த வேண்டிய மாற்று பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு நோட்டீசுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நடவடிக்கை எடுக்க முடிவு
மேலும் பிளாஸ்டிக் தடை குறித்து ஒட்டல்கள், பழக்கடைகள், திருமண மண்டபங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள் உள்பட அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள், தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது
ரூ.10 ஆயிரம் அபராதம்
வருகிற 1-ந் தேதிக்கு மேல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு ரூ.100-ம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரமும், சில்லரை வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரமும், பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் இருப்பு வைக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து அபராதம் விதிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து அதே தவரை செய்யும் வியாபார நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமான தீர்மானம் அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாற்று பொருட்கள்
அனைத்து மைக்ரான் தடிமனுக்கும் உட்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கேரி பைகள் உணவு பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்கள், விருந்து நிகழ்ச்சியில் சாப்பிடும் போது மேஜையில் விரிக்கப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கப்புகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
வாழை, தேக்கு, தாமரை, அரச இலைகள், துணி பைகள், பேப்பர் பைகள், துருப்பிடிக்காத எவர் சில்வர் பாத்திரங்கள், தட்டுகள், குவளைகள், குடி நீர் பாட்டில்கள், சில்வர் கரண்டி, பாக்கு மட்டை தட்டுகள், சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள், கிண்ணங்கள், மரத்தாலான சிறு கரண்டி, துணியாலான தோரணங்கள், கொடிகள், கண்ணாடி பிங்கான், உலோக தம்ளர்கள், பேப்பர் உறிஞ்சு குழல்கள் காகித சுருள்கள் ஆகியவற்றை மாற்று பொருளாக பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment