பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுரை

பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:
முறையான அனுமதி இன்றி, பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது, நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
முறையான ஆவணங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் விண்ணப்பித்து, போலீஸ் தடையின்மை சான்றுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து முன் அனுமதி பெற்ற பிறகே, பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்.
பத்தடி அளவுக்கு குறைவாக, நடைபாதை உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ், டிஜிட்டல் பேனர் அமைக்க விதிமுறைகளின் படி அனுமதி கிடையாது. 40 அடிக்கு மேல் அகலமுள்ள சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ், டிஜிட்டல் பேனர் அமைக்க விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படும்.
விதிமுறைகளை மீறுவோர் மீதும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அலுவலர்களை தடுப்பவர்கள் மீதும், ஓராண்டு சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
பேனர்களை அகற்றுவதற்கான செலவு தொகையும் பிளக்ஸ் பேனர் அமைத்தவரிடம் இருந்தே வசூலிக்கப்படும். அனுமதி பெற்ற விண்ணப்பதாரர், விதிமுறைகளை மீறி பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் அமைத்துள்ளார் என தெரியவந்தால், அனுமதி ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரர் செலுத்திய வைப்பு தொகையும் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
எஸ். பி., பாண்டியராஜன், துணை கமிஷனர் பாலாஜி சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மதுராந்தகி, கோட்டாட்சியர் தனலிங்கம், பேரூராட்சி உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், பிளக்ஸ் பிரிண்டர் உரிமையாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment