ஸ்ரீ அத்தி வரதர்

நாம் அனைவரும் வியப்பாக தற்போது பார்த்து வரும் கோயில்களில் ஒன்றாக மாறி உள்ளது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.
இங்குள்ள அத்தி வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் உருவாக்கினார். அத்திவரதர் தற்போது திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் குளத்தில் வைக்கப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவராக இருக்கும் வரதராஜ பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் இவர் பழைய சீவிரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜ பெருமாள் என கூறப்படுகின்றது. இதுகுறித்து கூறப்படும் புராணக்கதை விவரம் வருமாறு:-
ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப்பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைப்பெற ஒரு யாகம் மேற்கொண்டார்.
யாகத்திற்கு சரஸ்வதி தேவியை அழைக்காததால், துனைவி இல்லாமல் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்ம தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்.
பிரம்ம தேவனின் யாகத்தை காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியை தடுத்து பிரம்மனின் யாகத்தை காப்பாற்றினார்.
யாகத்தை காப்பாற்றிய திருமாலிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட வரத்தை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயர் வந்தது.

அத்தி மரத்தாலான மூலவர்
காஞ்சியில் தற்போது அருள் பாலித்து வரும் அத்திவரதர் அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்டவர். சிலை செய்வதற்கு எத்தனையோ மரங்கள் இருந்தும் அத்தி மரத்தை தேர்ந்து எடுத்தது ஏன்? என்பதற்கு அத்திமரத்தின் சிறப்புகள் குறித்து ஓம் நமோ நாராயணன் கூறியதாவது:-
கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும். இந்த சிறப்பை கொண்டது அத்தி மரம், அத்தி மரம் பூப்பதை யாராலும் பார்க்க முடியாது. அதன் காயை தான் எல்லோராலும் பார்க்க முடியும்.
அத்திபழம் அம்பிகையின் நைவேத்தியத்துக்கு உரிய ஒரு அற்புதமான பொருளாக விளங்குகிறது.
எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்தியம் செய்ய இந்த அத்திப்பழம் பயன்படுகிறது. உடலுக்கு உயிரோட்டத்தை மிக அதிகமாகவும் நுறையிரலுக்கு மிக அதிக பலத்தையும் தரக்கூடிய ஒரு பழமாகவும் உள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் அத்திப்பழம்.
புவியீர்ப்பு விசையை தடுக்கும்
அத்திமர கட்டைக்கு என்ன சிறப்பு என்றால் புவியீர்ப்பு விசையை தடுத்து மேல் வராமல் செய்யக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் இந்த அத்தி மரக்கட்டைக்கு உண்டு. அந்த காலத்தில் முனிவர்கள், ஞானிகள் தரையில் உட்கார்ந்து தவம் செய்ய மாட்டார்கள்.
தவம் செய்யும்போது பார்த்தால் தர்ப்பை விரிப்பு, புலித்தோல் விரிப்பு, மான்தோல் விரிப்பு ஆகியவற்றை பார்த்திருப்போம். அவை இப்போது நடைமுறையில் கிடையாது. பலகையில் உட்கார்ந்து தியானம் செய்வதை இன்றும் பார்க்கலாம். அந்தணர்கள் கூட தரையில் உட்கார்ந்து மந்திரங்களை சொல்லக் கூடாது என்ற நியதி இருக்கிறது.
அப்படி அந்த பலகை அத்திமரத்தினால் செய்தால் முழுவதுமான மந்திர சக்தி நமக்கே வரும். அந்த மந்திர சக்தி பூமியினால் ஈர்க்கப்படாது. இவ்வளவு சிறப்புகளை கொண்டது இந்த அத்திமரக்கட்டை.
இன்னொரு வரலாற்று சிறப்பும் இந்த அத்திமரக்கட்டைக்கு சொல்கிறார்கள். அது என்னவென்றால் மதுரையில் சங்கப்பலகை என்று கேள்விப்பட்டிருப்போம். அது எதற்காக என்றால் புலவர்கள் எல்லோரும் வந்து ஒரு நூலை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னால் சிலர் அதை நிராகரிப்பார்கள்.
அப்போது அந்த வழக்கம் இருந்தது. சிலர் அந்த நூலை ஏற்று கொள்ள முடியாது என்று சொல்லும் போது சங்கப்பலகையை நடுநிலையாக வைத்து மதுரை பொற்றாமரை குளத்தில் அந்த சங்கப்பலகை மீது தான் ஏடுகளை அதாவது நூலை வைப்பார்கள்.
அந்த நூலை தண்ணீரில் தள்ளி விடாமல் அந்த பலகை எற்று கொண்டால் அது எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட நூலாக இருக்கும். அப்படி அவர்கள் பயன்படுத்திய சங்கப்பலகையும் அத்திப்பலகையினால் ஆனது என்றும் சொல்கிறார்கள்.
திருக்குறளை ஏற்றுக்கொண்ட சங்கப்பலகை
இதற்கு திருவள்ளுவரின் திருக்குறளே ஒரு நல்ல உதாரணம் என்று சொல்லலாம். திருக்குறளை திருவள்ளுவர் அரங்கேற்றம் செய்த போது ஒரு சிலர் அதை ஏற்றுக் கொள்ள தயங்கினார்கள். அப்படி தயங்கிய காலத்தில் சங்கப்பலகை ஏற்றுக் கொண்டால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி சங்கப்பலகையில் திருக்குறளை வைத்து பொற்றாமரை குளத்தில் வைத்தனர்.
அப்போது சங்கப்பலகை திருக்குறளை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் இன்றைக்கும் திருக்குறளை படிக்கிறோம். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் போய் பார்த்தால் குளத்தை சுற்றியிருக்கிற சுவற்றில் 1330 திருக்குறள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஆக சங்கப்பலகை என்பது அந்த காலத்தில் அத்திமரத்தினால் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.
வாணமுட்டி பெருமாள்
அத்திவரதரை தவிர வேறு எங்காவது அத்திமரத்தினால் ஆன தெய்வம் வழிபாட்டுக்கு இருக்கிறதா? என்றால் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அது எங்கே இருக்கிறது என்றால் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிற கோழிமுட்டி என்ற அற்புதமான திருத்தலம்.
அந்த திருத்தலத்தில் 14 அடி உயரத்தில் எழுந்தருளி அருள் புரியக்கூடிய பெருமாளுக்கு அத்திமரம்தான் மூலவராக இருக்கிறார்.
அதாவது மூலஸ்தானத்தில் அத்திமரமே சுவாமியாக உள்ளது. அந்த மரத்தின் வேர் தான் சுவாமியின் திருப்பாதங்களாக வணங்கப்படுகிறது. அந்த பெருமாள் வாணமுட்டி பெருமாள் என்ற நாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
எனவே அத்திமரம் எல்லா வகையிலும் மிகுந்த பலன் தரக்கூடிய மரமாக உள்ளது. மற்ற மரங்களை விட அத்திமரம் தண்ணீரில் ஊற ஊற அதன் பளபளப்பு அதிகமாகும். பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அத்திவரதர் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறார் தெரியுமா?
கருங்கல் சிலையில் பாலிஷ் செய்வார்கள். அந்த சிலைக்கு அபிசேகம் செய்ய செய்யத்தான் அந்த விக்கிரகம் பளிச்சென்று இருக்கும். அதைப்போல அத்திமரத்துக்கும் தண்ணீருக்கும் அவ்வளவு தொடர்பு.
தண்ணீரில் ஊறிக் கொண்டிருந்தால் அத்திமரம் பளபளப்பாக இருக்கும். அதனால் தான் அத்திவரதர் பளபளப்பாக இருக்கிறார். இவ்வாறு ஓம் நமோ நாராயணன் கூறிகிறார்.
அத்திவரதர் எழுந்தருளிய காஞ்சியின் சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு எல்லோருக்கும் மிகப்பெரிய வாய்ப்பான ஆண்டு. ஏனென்றால் நாமெல்லாம் இந்த ஜென்மத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் அத்திவரதரை பார்க்கலாம். அவர் யாகத் தீயில் வந்தவராக இருந்தாலும் சரி, பிரம்மாவால் வழிபட்டவராக இருந்தாலும் சரி, அல்லது மூலவராக இருந்து மறைக்கப்பட்டு இருந்தாலும் சரி. இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த நேரத்தில் வெளியில் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தெரியாத விஷயங்கள்
காஞ்சிபுரத்தை பற்றி தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் தெரியாத விஷயங்கள் பலவும் இருக்கிறது. முக்தி தலங்கள் என்று சொல்கிறோம். அந்த முக்தி தலங்களில் சிறப்புமிக்க 7 தலங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. பிறக்க முக்தி திருவாரூர். தரிசிக்க முக்தி சிதம்பரம். இறக்க முக்தி காசி. நிலைக்க முக்தி திருவண்ணாமலை. இப்படி சொன்னாலே முக்தி கிடைக்கும் தலங்களின் பெயரை தான் நாம் கேட்டிருக்கிறோம்.
இவை இல்லாமல் ஆலயத்தின் புண்ணிய தீர்த்த தலங்களில் நீராடினாலே நமக்கு முக்தி தரக்கூடிய திருத்தலங்கள் என்று சொல்லப்பட்டவை 7 திருத்தலங்கள். அந்த 7 திருத்தலங்கள் என்ன என்று பல பேருக்கு தெரியாது. சப்த மோக்ஷ புரி என்று சொல்லக்கூடிய 7 திருத்தலங்கள், வாரணாசி, அயோத்தி, காஞ்சி, மதுரா, துவாரகா, உஜ்ஜயினி, ஹரித்துவார் ஆகியவையாகும். இந்த 7 திருத்தலங்களில் இருக்கக்கூடிய புண்ணிய நதிகளில் நீராடினாலே நமக்கு முக்தி தரக்கூடியவை. அந்த 7-ல் ஒன்றாக அமைந்திருக்கக்கூடியது காஞ்சி ஆகும்.
முப்பெரும் தேவி
இந்த காஞ்சி என்றால் உலகத்துக்கே தெரிந்த தெய்வம் காமாட்சி அம்மன் தான். ஏனென்றால் 51 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்த காமகோடி பீடமாக விளங்கக்கூடிய அன்னை காமாட்சி எழுந்தருளி அருள் புரிகிற தலம் அது ஆகும். காமாட்சியை வணங்கினால் முப்பெரும் தேவியை வணங்கிய பலன் கிடைக்கும் என்பார்கள்.
காஞ்சியை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று சிவ காஞ்சி. மற்றொன்று விஷ்ணு காஞ்சி. இப்படி 2 ஆக பிரிக்கக் கூடிய பாங்கு வேறு எந்த நகரத்திறகும் கிடையாது. சைவமும், வைணவமும் இணைந்து இருக்கக்கூடிய அருமையான திருத்தலமாக காஞ்சி விளங்குகிறது.
கனவில் தோன்றிய அத்திவரதர்
ஒருநாள் தேசிகர் கனவில் அத்திவரதர் தோன்றி, ‘நான் ஜீரண தசையில் இருக்கிறேன். எனக்கு இக்குளத்து நீரே இதமாய் இருக்கிறது. சீவரம் மலையில் உள்ள எனது சிலா பிம்பத்தை ஆராதியுங்கள்’ என்ற அருளாணை பிறப்பிக்கிறார். உடனே தேசிகர், ‘சுவாமி எங்களுக்கு அடிக்கடி சேவை சாதிக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார். அதற்கு அத்திவரதர், ‘அப்படியே ஆகட்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எழுந்தருளி ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை திருஆராதனை ஏற்று உலக மக்களுக்கு அருள்பாலிப்போம்’ என்கிறார்.
இதையடுத்து தேசிகர் கண்விழித்து கண்ட கனவை அனைவரிடமும் கூறுகிறார். ஆனால் கலவரம் மிகுந்தபோதும் வரதரை வந்தனை செய்து வந்த தேவராஜ பட்டர் அத்தி மரத்தாலேயே வரதரை எழுந்தருளுவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்போது ஸ்ரீதேசிகருக்கும், தேவராஜ பட்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
அத்தி வரதரை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்
சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில், பிரம்மன், தேவர்களுக்கு புண்ணியகோடி கோலத்தில் அதாவது சங்கு, சக்கரம், கதை தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். அப்படி புண்ணியகோடி கோலத்தில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை பிரம்ம தேவர் அத்திமரத்தில் வடித்து வழிபட்டார். ஸ்ரீ அத்தி வரத பெருமாள் கோவில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார்.
அத்தி வரதர் ஏன் குளத்தில் இருக்கிறார்? மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரதராஜ பெருமாளை முன்னிறுத்தி யாகத்தை நடத்தினார். அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையை பாதித்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன், நான் என்ன செய்வது என்று பெருமாளை வேண்டினார்.
பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர்விக்க கோவிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். பிரம்மனுக்கு பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இரைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரத பெருமாள் 24 நாட்கள் சயன வடிவிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இந்த அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்பதால், வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் அலை மோதுவார்கள். இரண்டாவது முறையாக இந்த பெருமாளை தரிசித்தால் வைகுண்ட பதவி பெறுவார்கள் என்பது ஐதிகம்.

Related posts

Leave a Comment